search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகா புஷ்கர விழா"

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவின் 11-வது நாளான இன்று பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார். #ThamirabaraniPushkaram #OPS
    சிங்கை:

    தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் தாமிரபரணிக்கு சிறப்பு வழிபாடுகளும், வேள்விகளும், மாலையில் மகா ஆரத்தியும் நடைபெற்று வருகிறது.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடக்க நாளில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார். தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், அரசு துறை அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் தாமிரபரணியில் நீராட வந்த வண்ணம் உள்ளனர்.

    விழாவின் 11-வது நாளான இன்று தாமிரபரணியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார். இதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு அம்பை வந்தார். அம்பையில் உள்ள ஓட்டலில் தங்கிய அவர் இன்று காலை 7.50 மணிக்கு பாபநாசத்திற்கு வந்தார்.



    பாபநாசம் தலையணை அருகே உள்ள ராஜராஜேஸ்வரி மண்டபம் அருகே தாமிரபரணி ஆற்றில் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார். முன்னதாக அவர் தாமிரபரணிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டார்.

    இதன் பிறகு அவர் பாபநாசம் பாபநாசம் நாதர் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் வருகையையொட்டி அம்பை பாபநாசம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பாபநாசத்தில் தரிசனம் செய்ததும் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூருக்கு சென்றார். அங்குள்ள தாமிரபரணியில் வழிபாடு செய்த அவர் பின்னர் அப்பகுதியில் உள்ள கஜேந்திரபெருமாள் கோவிலில் நடந்த புஷ்கர பூஜையில் கலந்து கொண்டார்.

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., ஏ.கே.சீனிவாசன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். #ThamirabaraniPushkaram #OPS

    தாமிரபரணியில் புஷ்கர விழாவுக்காக நீராட வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வர தொடங்கியுள்ளனர். #ThamirabaraniMahaPushkaram
    நெல்லை:

    144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் தாமிரபரணி புஷ்கர விழா இந்த ஆண்டு கடந்த 11-ந்தேதி தொடங்கி நடந்துவருகிறது. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆனதையடுத்து விருச்சிகத்துக்கு உரிய நதியான தாமிரபரணியில் மகா புஷ்கரவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவுக்காக கடந்த 6 மாதத்துக்கும் மேலாக பல்வேறு ஆன்மீக அமைப்புகள் ஏற்பாடுகள் செய்து வந்தன. பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி அந்தந்த பகுதியில் விழா நடத்தும் அமைப்புகள் காலையில் ஆற்றில் புனித நீராடலையும், தொடர்ந்து சிறப்பு யாகங்கள், கலை நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன. மாலையில் தாமிரபரணிக்கு மகா ஆரத்தியும், தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன.

    அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பாக பாபநாசம் மற்றும் நெல்லை தைப்பூச மண்டபம் ஆகிய 2 இடங்களில் புஷ்கர விழா நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை இப்பகுதியில் சிறப்பு யாகங்கள், வழிபாடுகள் நடைபெற்றன.

    புஷ்கர விழாவின் 3-வது நாளான இன்று தாமிர பரணியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் சிறப்பு வசதிகள் செய்திருந்தன. தொடர்ந்து தாமிரபரணியில் புஷ்கர விழாவுக்காக நீராட வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வர தொடங்கியுள்ளனர்.

    பாபநாசம் சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் அனைத்து சித்தர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து சித்த மருத்துவர்கள் பங்கேற்றனர். இன்று மாலை பாபநாசம் இந்திர கீல தீர்த்த படித்துறையில் மகா ஆரத்தி நடைபெறுகிறது.

    பாபநாசம் சித்தர்கள் கோட்டம் மற்றும் பாபநாசம், சிங்கை ஊர்மக்கள் சார்பாக திரிநதி சங்கம தீர்த்தத்தில் புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. புஷ்கர விழாவின் 3-வது நாளான இன்று காலையில் சிறப்பு வேள்வி நடைபெற்றது. மாலையில் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆரத்தி பூஜை நடத்தப்படுகிறது.

    காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடை மருதூர் புடாட்சர தீர்த்தத்தில் நடைபெற்ற விழாவில் இன்று காலை சுதர்சன ஓமம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. மாலையில் சிறப்பு ஆரத்தியும், திவ்யநாம சங்கீர்த்தனமும் நடைபெறுகிறது.

    அம்பை, கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள படித்துறைகளிலும் தாமிரபரணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நெல்லை மேலநத்தம் அக்னி தீர்த்த கட்டத்தில் நேற்று புஷ்கர விழா தொடங்கியது. இன்று காலையும் இங்கு தாமிரபரணிக்கு வழிபாடுகள் நடைபெற்றது.

    குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறையில் காலையில் தாமிரபரணிக்கு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. நெல்லை கைலாசபுரம் கைலாசநாதர் படித்துறையில் காலையில் வேதபாராயணம் மற்றும் ஓமங்கள் நடைபெற்றன. நெல்லை சங்கீத சபாவில் பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெற்றது. மாலையில் தாமிரபரணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் அலங்கார தீபாராதனை, ஆரத்தி நடைபெறுகிறது.

    அருகன்குளம் எட்டெழுத்துபெருமாள் கோவில் கோசாலையில் இன்று காலை சிறப்பு ஓமம் நடந்தது. 50-க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் கலந்துகொண்டு யாகம் வளர்த்தனர். இதேபோல் முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம், ஸ்ரீவைகுண்டம் படித்துறை, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை பல்வேறு யாகங்கள், வழிபாடுகள் நடைபெற்றன.

    புஷ்கர விழாவையொட்டி பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆற்றில் நீச்சல் வீரர்கள், தீயணைப்பு படையினர் ரப்பர் படகு மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆற்றில் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.  #ThamirabaraniMahaPushkaram




    ×